ஆமோஸ்

7 அதிகாரம்


    1. கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்ததாவது: இதோ, ராஜாவினுடைய புல்லறுப்புக்குப்பின்பு இரண்டாம் கந்தாயத்துப் புல் முளைக்கத் தொடங்குகையில் அவர் வெட்டுக்கிளிகளை உண்டாக்கினார்.

    2. அவைகள் தேசத்தின் புல்லைத்தின்று தீர்ந்தபோது, நான்: கர்த்தராகிய ஆண்டவரே மன்னித்தருளும்; யாக்கோபு திரும்ப யாராலே எழுந்திருப்பான்? அவன் சிறுத்துப்போனான் என்றேன்.

    3. கர்த்தர் அதற்கு மனஸ்தாபப்பட்டு, அப்படி ஆவதில்லை என்றார்.

    4. கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்ததாவது: இதோ, அக்கினியாலே நியாயம் விசாரிப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் ஏற்பட்டார்; அது மகா ஆழியைப் பட்சித்தது, அதில் ஒரு பங்கைப் பட்சித்துத் தீர்ந்தது.

    5. அப்பொழுது நான்: கர்த்தராகிய ஆண்டவரே, நிறுத்துமே; யாக்கோபு திரும்ப யாராலே எழுந்திருப்பான்? அவன் சிறுத்துப்போனான் என்றேன்.

    6. கர்த்தர் அதற்கு மனஸ்தாபப்பட்டு, அப்படி ஆவதில்லை என்றார்.

    7. பின்பு அவர் எனக்குக் காண்பித்ததாவது: இதோ, தூக்குநூல் பிரமாணத்தினால் கட்டப்பட்ட ஒரு மதிலின்மேல் நின்றார்; அவர் கையில் தூக்குநூல் இருந்தது.

    8. கர்த்தர் என்னை நோக்கி: ஆமோசே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்றார்; தூக்குநூலைக் காண்கிறேன் என்றேன்; அப்பொழுது ஆண்டவர்: இதோ, இஸ்ரவேலென்னும் என்ஜனத்தின் நடுவே தூக்குநூலை விடுவேன்; இனி அவர்களை மன்னிக்கமாட்டேன்.

    9. ஈசாக்கின் மேடைகள் பாழும், இஸ்ரவேலின் பரிசுத்த ஸ்தலங்கள் அவாந்தரமுமாக்கப்படும்; நான் எரொபெயாம் வீட்டாருக்கு விரோதமாய்ப் பட்டயத்தோடே எழும்பிவருவேன் என்றார்.

    10. அப்பொழுது பெத்தேலில் ஆசாரியனான அமத்சியா இஸ்ரவேலின் ராஜாவாகிய எரொபெயாமுக்கு ஆள் அனுப்பி: ஆமோஸ் இஸ்ரவேல் வம்சத்தாரின் நடுவே உமக்கு விரோதமாகக் கட்டுப்பாடு பண்ணுகிறான்; தேசம் அவன் வார்த்தைகளையெல்லாம் சகிக்கமாட்டாது.

    11. எரோபெயாம் பட்டயத்தினால் சாவான் என்றும், இஸ்ரவேல் தன்தேசத்திலிருந்து சிறைபிடித்துக்கொண்டுபோகப்படுவான் என்றும் ஆமோஸ் சொல்லுகிறான் என்று சொல்லச்சொன்னான்.

    12. அமத்சியா ஆமோசை நோக்கி: தரிசனம் பார்க்கிறவனே, போ; நீ யூதாதேசத்துக்கு ஓடிப்போ, அங்கே அப்பம் தின்று, அங்கே தீர்க்கதரிசனம் சொல்லு.

    13. பெத்தேலிலே இனித் தீர்க்கதரிசனம் சொல்லாதே; அது ராஜாவின் பரிசுத்த ஸ்தலமும் ராஜ்யத்தின் அரமனையுமாயிருக்கிறது என்றான்.

    14. ஆமோஸ் அமத்சியாவுக்குப் பிரதியுத்தரமாக: நான் தீர்க்கதரிசியுமல்ல, தீர்க்கதரிசியின் புத்திரனுமல்ல; நான் மந்தை மேய்க்கிறவனும், காட்டத்திப்பழங்களைப் பொறுக்குகிறவனுமாயிருந்தேன்.

    15. ஆனால் மந்தையின் பின்னாலே போகிறபோது என்னைக் கர்த்தர் அழைத்து, நீ போய் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லு என்று கர்த்தர் உரைத்தார்.

    16. இப்போதும் நீ கர்த்தருடைய வார்த்தையைக் கேள்; இஸ்ரவேலுக்கு விரோதமாய்த் தீர்க்கதரிசனம் சொல்லாதே, ஈசாக்கின் வம்சத்தாருக்கு விரோதமாக ஒன்றையும் சொல்லாதே என்று சொல்லுகிறாயே.

    17. இதினிமித்தம்: உன் பெண்ஜாதி நகரத்தில் வேசியாவாள்; உன் குமாரரும் உன் குமாரத்திகளும் பட்டயத்தால் விழுவார்கள்; உன் வயல் அளவு நூலால் பங்கிட்டுக்கொள்ளப்படும்; நீயாவெனில் அசுத்தமான தேசத்திலே செத்துப்போவாய்; இஸ்ரவேலும் தன் தேசத்திலிருந்து சிறைபிடிக்கப்பட்டுக் கொண்டுபோகப்படுவான் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.


முந்தின அதிகாரம் | ஆகமங்களின் அட்டவணை | Index Table | அடுத்த அதிகாரம்

தமிழில் தேடுதல் | Home